×

வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கத்திற்கு ₹4181.03 கோடியில் 219 திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 15: வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கத்திற்கு ₹4181 கோடி மதிப்பீட்டில் 219 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை முழுவதும் ஒரே சீரான மற்றும் விரிவான வளர்ச்சியை உறுதிசெய்வதற்கான முயற்சியில், 11 வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய முக்கியமான திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்காக ₹4,181.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையின் சீரான வளர்ச்சிக்கு தேவையான முக்கிய திட்டங்களை கண்டறியும் நோக்கில், பல்வேறு துறையை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் இணைந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் நடத்தப்பட்ட மிக நுட்பமான கணக்கெடுப்பில் இருந்து மாற்றத்திற்கான இந்த புதிய முயற்சி உருவானது.

வடசென்னை முழுவதும் 3,800க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து, விரிவான வினாப்பட்டியல் கணக்கெடுப்பு வாயிலாக சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அப்பகுதிக்கு உடனடியாக தேவைப்படும் திட்டங்கள் கண்டறியப்பட்டன. வடசென்னையின் முக்கிய இடங்களில் ‘வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்’ கீழ் வளர்ச்சியின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட முக்கிய திட்டங்களில், மாதிரி பள்ளிகளை மேம்படுத்துதல், ஏற்கத்தக்க விலையில் வீடுகள், திறன் மேம்பாட்டு மையத்தை உருவாக்குதல், புதிய பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளை தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமானம், முக்கிய பகுதிகளில் துணை மின்நிலையம், போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம், சிசிடிவி கேமராக்கள் அமைப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக உயர்தர சிகிச்சை பிரிவு, குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள், வணிக சந்தைகள், சலவையகம், குருதி சுத்திகரிப்பு மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ₹1034.24 கோடி மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள், சென்னை மாநகராட்சி சார்பில் ₹1071.44 கோடி மதிப்பீட்டில் 86 திட்டப்பணிகள், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ₹946.43 கோடி மதிப்பீட்டில் 49 திட்டப்பணிகள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ₹440.62 கோடியில் 28 திட்டப்பணிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ₹287.84 கோடியில் 23 திட்டப்பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ₹287.60 கோடியில் 4 திட்டப்பணிகள், கல்வித்துறை சார்பில் ₹57.43 கோடியில் 2 திட்டப்பணிகள், காவல் துறை சார்பில் ₹28.70 கோடியில் 6 திட்டப்பணிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ₹4.50 கோடியில் 1 திட்டப்பணி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ₹2.25 கோடியில் 3 திட்டப்பணிகள், மீன்வளத்துறை சார்பில் ₹20 கோடியில் 1 திட்டப்பணி என மொத்தம் ₹4181.03 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும். இந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் வடசென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் வழிவகுக்கும்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, பரந்தாமன், ஜான் எபிநேசர், வெற்றியழகன், ஐட்ரீம் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்கத்திற்கு ₹4181.03 கோடியில் 219 திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...